Published : 27 Jan 2023 09:02 AM
Last Updated : 27 Jan 2023 09:02 AM
புதுடெல்லி: மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 67 சதவீத மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில் மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே, சி வோட்டர் சார்பில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில் 67 சதவீத மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல்களை மோடி அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. என்று பெரும்பாலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சுமார் 18 சதவீதம் பேர் மட்டுமே மத்திய அரசு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் அவசியம் என்று பதில் அளித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மட்டுமே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹிஜாபுக்கு தடை விதிப்பது சரியா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் சரி என்றும் 26 சதவீதம் பேர் தவறு என்றும் பதில் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்பது குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு 38 சதவீதம் பேர், சரி என்று பதில் அளித்தனர். அரசு நிர்வாகமே, நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்று 19 சதவீதம் பேர் வாக்களித்தனர். அரசு மற்றும் நீதித்துறை இணைந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று 31 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 10 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT