Published : 26 Jan 2023 12:07 PM
Last Updated : 26 Jan 2023 12:07 PM
புதுடெல்லி: ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’ என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கிமீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை’ என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தினவிழா பேரணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதல் முறையாக எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல் சிசி கலந்து கொண்டார்.
> குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடமை பாதையில் முதல்முறையாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசத்தை வழிநடத்தினார். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்த பிரம்மாண்ட அணிவகுப்பு நாட்டின் ராணுவ பலத்தையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் பறைசாற்றுவதாக இருந்தது.
> நிகழ்ச்சிகான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 6,000 வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. 150 கண்காணிப்பு காமிராக்களின் மூலமாக கடமை பாதை கண்காணிக்கப்பட்டது
> அணிவகுப்பில், முதலில் எகிப்திய ஆயுதப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுத்துச் சென்றது. இந்த குழுவில் 144 வீரர்கள் இடம்பெற்ற இந்த குழுவினர், எகிப்து ஆயுதப்படையின் முக்கிய பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
> பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு தெரிவித்திருந்த குடியரசு தின வாழ்த்துதில்,"நாடு சுதந்திரம் பெற்ற அமிர்தப் பெருவிழா நேரத்தில் இந்த விழாவும் கொண்டாடப்பாடுவது மிகவும் சிறப்பானதாகும். நாட்டின் மகத்தான விடுதலைப்போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்கும் வண்ணம் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருந்தார்.
> அணிவகுப்பில், 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஆறு அமைச்சகங்கள் துறைகளின் சார்பில் கலாச்சார பாரம்பரியம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம், பெண் சக்தி ஆகியவைகளில் புதிய இந்தியாவை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன.
> கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற 479 கலைஞர்கள் வந்தே பாரதம் நடனப் போட்டி மூலம் நாடு முழுவதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு நாடுமுழுவதில் இருந்தும் போட்டி மூலம் நடனக்கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்க வைப்பது இது இரண்டாவது முறை.
> ராணுவ வீரர்களின் டேர் டெவில் குழுவின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வீரம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை போன்றவைக்களில் சாதனை புரிந்ததற்காக பிரதம மந்திரியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற செய்த 11 குழந்தைகளும் அணிவகுப்பில் இடம்பெற்றனர்
> இறுதியாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் நாட்டின் புதிய ரஃபேல் போர் விமானங்கள் தங்களது சாகசங்களை காட்டின கடந்த இரண்டு வருடங்களாக அணிவகுப்பு சாகச நிகழ்ச்சியில் ரஃபேல் விமானங்கள் பங்கேற்று இருந்தாலும், சாகச நிகழ்ச்சியில் 9 விமானங்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை.
> இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடியரசு தின விழாவின் முதல் வரிசை நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டிய தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காய்கறி விற்பவர்கள், பால் விற்பவர்கள் உள்ளிட்ட குடிமகன்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படிருக்கிறார்கள். விவிஐபிகளுக்கு ஒதுக்கப்படும் முதல் வரிசையில் இவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
> ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஷின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தொடங்கிய குடியரசு தினவிழா கொண்டாட்டம், ஜனவரி 29 ம் தேதி, "பீட்டிங் தி ரிட்ரீட்" விழாவுடன் நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் விழாவாக 3500 ட்ரோன்கள் பறக்க இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT