Published : 26 Jan 2023 09:39 AM
Last Updated : 26 Jan 2023 09:39 AM
புதுடெல்லி: இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி நேற்று இந்தியா வந் தடைந்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
பின்னர் பிரதமர் மோடியும், அல்-சிசியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மத்திய அரசு கூறியதாவது:
மனித குலத்துக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதை இருதரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும், கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட ஏதுவாக இரு நாடுகளுக்கிடையிலும் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.1 லட்சம்கோடி அளவுக்கு உயர்த்த முடிவுசெய்யப்பட்டது. பாதுகாப்பு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பயங்கரவாதம் மற்றும் உளவுத் துறைத் தொடர்பான தகவல்கள் பரிமாற்றத்தை தடையின்றி விரைவாக மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப் பட்டது.
எகிப்து நாட்டுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும் என்று அல்-சிசி பிரதமர் நரேந்திர மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அரபு தலைவர்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக எகிப்து அதிபர் அல்-சிசி (68) உள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்த அவர் இன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபரை சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது இதுவே முதல் முறை. அரபு, ஆப்பிரிக்க நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வரும் எகிப்துடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT