Published : 26 Jan 2023 04:55 AM
Last Updated : 26 Jan 2023 04:55 AM

குடியரசு தின விழாவை நடத்தியே தீர வேண்டும் - தெலங்கானா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சந்திரசேகர ராவ்

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளுநரை தவிர்க்க கரோனா பாதிப்பை காரணம் காட்டி, குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. ஆனால் குடியரசு தின விழாவை ஆளுநர் தலைமையில் நடத்தியே தீரவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் (கேசிஆர்) இடை யில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும். ஆளுநரும் முதல்வரும் இதில் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2022-ல்கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தலைநகரில் வழக்கமான குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது.

முதல்வர் – ஆளுநர் இடையிலான விரிசல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டும் கரோனா பாதிப்பை காரணம் காட்டி தலைநகரில் வழக்கமான குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது.

ராஜ்பவனில் விழாவை தனியாக நடத்திக் கொள்ளலாம் என ஆளுநர் தமிழிசைக்கு தகவல் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநரை தவிர்ப்பதற்காகவே விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு பரவியது.

இந்நிலையில் அரசின் முடிவுக்கு எதிராக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நிவாஸ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கரோனா தொற்றே இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் இரு தரப்புவாதங்களையும் கேட்டது. இறுதியில் மத்திய அரசின் நிபந்தனைகளை பின்பற்றி குடியரசு தின விழா நடத்தியே தீர வேண்டும் என தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டது. இது தெலங்கானா அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் வழக்கமான குடியரசு தின விழா ஆளுநர் தமிழிசை தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கேசிஆர் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. முதல்வருக்கு பதிலாக மூத்த அமைச்சர்கள் அல்லது தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் தமிழிசை இவ்விழாவில் கொடியேற்றிய பிறகு தனதுசொந்த செலவில் தனி விமானத்தில் புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றவுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் இதுகுறித்து விரைவில் குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்படும் எனவும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x