Published : 25 Jan 2023 11:57 AM
Last Updated : 25 Jan 2023 11:57 AM
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அனில் அந்தோணி இன்று(புதன்கிழமை) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும் துஷ்பிரயோகமுமாக இருக்கிறது. இதற்குப் பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்." என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனது ராஜினமா கடிதத்தையும் இணைத்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்த பிபிசியின் சர்ச்சைக்குரிய இரண்டு பாக ஆவணப்படம் குறித்து அனில் அந்தோணி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அதில், "பாஜகவுடன் பெரிய அளவில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், இந்தியாவுக்கு எதிரான; பாரபட்சத்துடன் செயல்படக்கூடிய; இங்கிலாந்து அரசின் ஆதரவைப் பெற்ற ஒரு தொலைக்காட்சியின் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பார்வையை அப்படியே முன் வைப்பது நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் "என்று தெரிவித்திருந்தார். பிரதமர் குறித்த பிபிசியின் ஆவணப்படம் கேரளா முழுவதும் திரையிடப்படும் என்ற அம்மாநில காங்கிரஸ் கட்சி கூறி இருந்த நிலையில், அதற்கு எதிரான கருத்தை அனில் அந்தோணி முன்வைத்தது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அனில் அந்தோணி, "ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யாருடனும் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், சுதந்திரத்தின் இந்த 75வது ஆண்டில், வெளிநாட்டினரோ அல்லது அவர்களது நிறுவனமோ நமது நாட்டின் இறையாண்மையை குறைத்து மதிப்பிட அனுமதிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ஆவணப்படம்: கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா - மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல; மதிப்பில்லாத ஒரு கதையை மீண்டும் தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகமும், இது ஒரு காலனியாதிக்க மனநிலை என்று மத்திய அரசும் விமர்சித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
I have resigned from my roles in @incindia @INCKerala.Intolerant calls to retract a tweet,by those fighting for free speech.I refused. @facebook wall of hate/abuses by ones supporting a trek to promote love! Hypocrisy thy name is! Life goes on. Redacted resignation letter below. pic.twitter.com/0i8QpNIoXW
— Anil K Antony (@anilkantony) January 25, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT