Published : 25 Jan 2023 04:08 AM
Last Updated : 25 Jan 2023 04:08 AM
சென்னை: தேர்வு குறித்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கும் `தேர்வும் தெளிவும்' நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியின் மாநில பொறுப்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின்மிகப்பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் - பரீட்சையை பற்றி விவாதிப்போம்' நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.
அன்று காலை 11 மணி அளவில் டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர்மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளிக்க உள்ளார். இதில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிரி யர்களுடன் கலந்து கொள்கின்றனர்.
இது மட்டுமின்றி, innovateindia.mygov.in என்ற இணையதளம், Namo செயலி போன்றவை மூலமாக, தேர்வு தொடர்பான தங்களது ஆலோசனை, அனுபவம், கருத்து போன்றவற்றை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.
தொடர்பு எண் அறிவிப்பு: இதையொட்டி, மாணவர்கள் உள்ளிட்டோர் தேர்வு குறித்து சொல்ல விரும்புவதை தங்கள் குரலிலேயே பதிவு செய்வதற்கான வாய்ப்பை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது. ‘1921’ எனும் தொடர்பு எண் மூலமாக, தேர்வு குறித்த கருத்தை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பிரதமருக்கு தெரிவிக்கலாம்.
மாணவர்களுக்கு பிரதமர்ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர்.
அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு குறித்துதங்களது அனுபவங்கள், ஆலோசனைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT