Published : 24 Jan 2023 04:57 PM
Last Updated : 24 Jan 2023 04:57 PM

“ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை” - ராகுல் காந்தி

ஜம்மு: இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று விமர்சித்திருந்தார். ''பாகிஸ்தானுக்குள் சென்று துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.'' என கூறி இருந்தார்.

திக்விஜய் சிங்கின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ''ஒரு பக்கம் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் சென்றுகொண்டிருக்கிறார். அனால், அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்களே அதே யாத்திரையில் கலந்து கொண்டு இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்பு காரணமாக என்ன பேசுகிறோம் என தெரியாமல், நமது ராணுவத்துக்கு எதிராக திக்விஜய் சிங் பேசி இருக்கிறார். ராணுவத்துக்கு எதிரான பேச்சை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, திக்விஜய் சிங்கின் பேச்சு காங்கிரசின் கருத்து அல்ல என்றும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்தது. அக்கட்சியின் செய்தித்தொடர்பு பொதுச் செயாலாளர் ஜெயராம் ரமேஷ், இவ்வாறு விளக்கம் அளித்திருந்தார். நாட்டின் நலன் கருதி நமது ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கும் என்றும் அவர் கூறி இருந்தார். இதையடுத்து, நமது நாட்டின் ராணுவத்தின் மீது மிகப் பெரிய மரியாதை தனக்கு இருப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில் ஜம்முவில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, ''திக்விஜய் சிங்கின் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. அது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்பது தெளிவானது. ராணுவம் ஆதாரம் எதையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x