Published : 23 Jan 2023 05:15 PM
Last Updated : 23 Jan 2023 05:15 PM
ஜம்மு: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''பாகிஸ்தானுக்குள் சென்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நாடு நம் அனைவருக்குமானது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? புல்வாமா பகுதி மிகவும் ஆபத்து நிறைந்தது என்பதால், துணை ராணுவப் படையினரை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்து வர துணை ராணுவப் படை தலைவர் அனுமதி கோரினார். ஆனால், அனுமதி அளிக்க பிரதமர் மறுத்துவிட்டார். ஏன் அவர் மறுத்தார்?
புல்வாமா பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பாதுகாப்புப் படையினரால் சோதனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், பயங்கரவாதி வந்த வாகனம் ஏன் சோதனை செய்யப்படவில்லை? இத்தனைக்கும் அந்த வாகனம் தவறான திசையில் வந்தபோதும் அது சோதனை செய்யப்படவில்லை. இந்த தாக்குதல் குறித்த தகவல்கள் இதுவரை நாடாளுமன்றத்திற்கோ, பொதுமக்களுக்கோ அளிக்கப்படவில்லை'' என தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது பயங்கரவாதி ஒருவர் புல்வாமா என்ற இடத்தில் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT