Published : 23 Jan 2023 03:30 PM
Last Updated : 23 Jan 2023 03:30 PM
கொல்கத்தா: பாதைகள் வேறாக இருந்தாலும் நேதாஜி மற்றும் ஆர்எஸ்எஸ் இரு தரப்பின் இலக்கும் ஒன்றுதான் என்று மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் விழா நடைபெற்றது. இதில், அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மசும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் சீருடையில் கலந்து கொண்டனர்.
மேலும், சீருடை அணிந்த தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ''நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பிற்காக மட்டுமல்ல, அவருடைய பண்புகளை நாம் உள்வாங்கிக்கொள்வதை உறுதிசெய்வதற்காகவும் ஆர்எஸ்எஸ் அவரை நினைவுகூருகிறது. அவர் கட்டமைக்க நினைத்த இந்தியா குறித்த அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை. அதை அடைய நாம் உழைக்க வேண்டும்.
சுபாஷ் சந்திர போஸ் முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் சத்தியாகிரகப் போராட்டங்களில் பங்கேற்றார். ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு அதுமட்டுமே போதுமானது அல்ல என்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்தே, சுதந்திரத்திற்கான தனது பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். காங்கிரசின் பாதையும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பதையும் வேறானது. என்றாலும், நோக்கம் வேறானது அல்ல. ஒரே நோக்கம்தான்.
சுபாஷ் சந்திரபோசின் லட்சியங்களை நாம் பின்பற்ற வேண்டும். அவர் கொண்டிருந்த இலக்குகளும் ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கும் இலக்குகளும்கூட ஒன்றேதான். உலகின் சிறிய வடிவம்தான் இந்தியா என்றும்; இந்தியா உலகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நேதாஜி கூறியிருந்தார். அதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் கொள்கைகளும் வேறு வேறானவை என்றும், நேதாஜி மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது என்றும் சிலர் விமர்சித்திருந்த நிலையில், மோகன் பாகவத் இவ்வாறு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT