Published : 22 Jan 2023 06:46 PM
Last Updated : 22 Jan 2023 06:46 PM
ஜம்மு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்முவில் நடைபெற்று வரும் நிலையில், "ராகுல் காந்தியின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும். வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. யாத்திரை தற்போது அதன் கடைசி பகுதியான ஜம்முவில் நடைபெற்று வருகிறது. ஜம்முவிலுள்ள கத்துவாவின் லக்னாபூர் பகுதியில் யாத்திரை கடந்த வியாழக்கிழமை மாலை நுழைந்தது. இதற்கிடையில் ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் சனிக்கிழமை காலை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஜம்முவின் ஹிராநகர் பகுதியில் இருந்து பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மீண்டும் தொடங்கியது.
இந்தச் சூழ்நிலையில் ஜம்முவின் சம்பா மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. அவரின் பாதுகாப்பே எங்களுக்கு பிரதானம். பாதுகாப்பு நிறுவனங்கள் சொல்வதை நாங்கள் பின்பற்றுவோம்" என்று தெரிவித்தார். இதனிடையே, ''ராகுல் காந்திக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போலீஸாருடன், சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நார்வாலில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஐஇடி பயன்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டும் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த ஆண்டு செப்.7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா என பல மாநிலங்கள் வழியாகச் சென்ற யாத்திரை, தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. ஜன.30 ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றுவதுடன் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைய இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT