Published : 21 Jan 2023 11:25 AM
Last Updated : 21 Jan 2023 11:25 AM

குஜராத் | சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி விரோதமாக செயல்பட்ட 38 பேர் காங்கிரஸிலிருந்து நீக்கம்

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட 38 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1,5 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது. மோடி அலையின் தாக்கத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று 7வது முறையாக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக்கூட காங்கிரஸ் கட்சியால் மீண்டும் உறுதி செய்ய முடியவில்லை.

இந்தநிலையில், ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் சட்டப்பேரைவத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய உண்மைக் கண்டறியும் குழுவினை காங்கிரஸ் கட்சி அமைத்தது. நிதின் ராவுத், ஷகீல் அகமது கான், சப்தகிரி சங்கர் உல்கா ஆகிய மூன்று பேர் அடங்கிய அந்தக்குழு தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் குஜராத் காங்கிரஸ் கட்சியில் இருந்து 38 பேர் இடையநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாலு பாட்டீல் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழு இந்த மாதத்தில் இரண்டுமுறை கூடி 95 பேருக்கு எதிராக 71 புகார்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 38 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எட்டுபேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் சுரேந்திரநகர் மாவட்டத்தலைவர் ராயாபாய் ரதோட், நர்மாதா மாவட்டத் தலைவர் ஹரேந்திர வலாந்த், நான்தோத் முன்னாள் எம்எல்ஏ பிடி வசவா ஆகியோரும் அடக்கம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x