Published : 20 Jan 2023 12:28 PM
Last Updated : 20 Jan 2023 12:28 PM
புதுடெல்லி: புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற 71 ஆயிரம் பேருக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணிகளுக்கு மொத்தமாக பணியாளர்களை நியமிக்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணிவாய்ப்பு பெற்றுள்ள புதிய பணியாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது, ரோஸ்கர் மேளா என்பது நல்லாட்சியின் அடையாளமாக மாறி உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு இருக்கும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று.
நுகர்வோர் சொன்னால் அதுதான் சரி(The consumer is always right) என வணிக உலகில் கூறப்படுவது உண்டு. அதுபோல், நாட்டு மக்கள் சொன்னால் அதுதான் சரி(Citizen is always right) என்பதே ஆட்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளையும், சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கணக்காளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 71 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT