Published : 19 Jan 2023 01:52 PM
Last Updated : 19 Jan 2023 01:52 PM

பாலியல் புகார் | 72 மணி நேரத்தில் பதிலளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவு

படம்: சுஷில் குமார் வர்மா

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பயிற்சியாளர்கள் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க அளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன்சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாக பார்க்கிறது. இந்த விவாகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் பதில் அளிக்க தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி, 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜன.18 ஆம் தேதி லக்னோவிலுள்ள, விளையாட்டு ஆணையத்தின், தேசிய சிறப்பு மையத்தில் ( National Centre of Excellence ) 41 மல்யுத்த வீரர்கள், 13 பயிற்சியாளர்கள் மற்றும் துணை பணியாளர்களுடன் தொடங்க இருந்த பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஏற்கெனவே லக்னோ வந்திருக்கும், வர இருக்கும் தேசிய சாம்பியன்களும், பயிற்சி மையத்தில் இருந்து கிளம்பும் வரை அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரும்படி, என்சிஓஇ மையத்தின் இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவிலான பயிற்சி முகாம் ரத்து குறித்து அனைத்து சாம்பியன்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் , "இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு மிகவும் வேண்டிய பயிற்சியாளர்கள், பெண் மல்யுத்த வீராங்கணைகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி அவர்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். மேலும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தோல்விக்கு பின்னர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார். தன்னை "கோட்டா சிக்கா" என்று அழைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜன்தர் மந்திர் பகுதியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பேசிய போகட்," பயிற்சியாளர்கள் வீராங்கணைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். கூட்டமைப்பிற்கு வேண்டப்பட்ட பயிற்சியாளர்கள் சில பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொண்டனர். பயிற்சியாளர்களும், கூட்டமைப்பின் தலைவரும் பல சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்" என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் வீரங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு அவர்களை சீரழிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

ஒரு மல்யுத்த வீராங்கனை கூறுகையில்,நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை. இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக தொடர்ந்து நாங்கள் மிரட்டப்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா," கூட்டமைப்பின் நிர்வாகம் களைக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வீராங்கனைகள் விரும்புவதாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x