Published : 18 Jan 2023 03:29 PM
Last Updated : 18 Jan 2023 03:29 PM
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மற்றும் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2 ஆம் தேதியே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் | தேர்த்ல தேதி |
திரிபுரா | பிப்ரவரி 16 |
மேகாலயா | பிப்ரவரி 27 |
நாகாலாந்து | பிப்ரவரி 27 |
நாகாலாந்து நிலவரம் என்ன? - நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2018-ம் ஆண்டு நாகாலாந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், இம்முறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. கூட்டணி வலுவாக அமைந்தால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது.
திரிபுராவில் திருப்பம் வருமா? - இடதுசாரிகளின் கோட்டை என ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட திரிபுராவில் இப்போது பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. கட்சித் தாவல்கள் நடைபெறும் ஆனால் திரிபுராவில் நடந்ததுபோல் எங்குமே நடந்திருக்காது. காங்கிரஸ் கூடாரமே பாஜகவாக மாற 2018 தேர்தலில் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்தது. காங்கிரஸார் செய்த பிழையால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தது. இடதுசாரிகள் மீண்டெழுவார்களா? காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா என்பதெல்லாம் இப்போதைக்கு அங்கே கணிக்க முடியாத சூழலாகவே உள்ளது.
காங்கிரஸுக்கு வாய்க்குமா? - மேகாலயா மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், என்பிபி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அங்கு காங்கிரஸ் இந்த முறை ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறது.
இத்தகைய சூழலில் தான் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்: ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவெரா திருமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இருப்பார் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT