Published : 18 Jan 2023 09:17 AM
Last Updated : 18 Jan 2023 09:17 AM

ஆந்திரா | குண்டூரில் வியக்க வைக்கும் வாகன வடிவ ஓட்டல்

குண்டூர்: ஆந்திராவின் குண்டூரில் வாகன பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஓட்டல், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது.

ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லாரி சரக்கு போக்குவரத்து தொழில் நடத்தி வந்தார். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை கைவிட்டார். தனது மகன் விஜய் குமாரையும் லாரி போக்குவரத்து தொழிலில் ஈடுபடுத்த அவருக்கு விருப்பம் இல்லை. மகனின் எதிர்காலத்துக்காக ஓட்டல் தொழில் நடத்த அவர் முடிவு செய்தார்.

மக்களை கவரும் வகையில் குண்டூர் மங்களகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதுமையான முறையில் ஓட்டலை வடிவமைத்தார். இதன்படி ஒரு லாரியின் கேபினை, ஓட்டலின் முகப்பாக மாற்றினார். அதற்குள் குடும்பத்துடன் உணவு சாப்பிடும் வகையில் மேஜை, நாற்காலிகளை அமைத்தார்.

பழைய மாடல் கார்களை மேஜைகளாக மாற்றினார். சைக்கிள் மீது கை கழுவும் இடம், மேஜையை வடிவமைத்தார். பெட்ரோல் நிலைய தோற்றத்தில் பீரோவை உருவாக்கினார். ‘கூஃப்பூ (GOOFOO) என்று ஓட்டலுக்கு பெயர் சூட்டினார். குண்டூர் மங்களகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்லும் மக்கள், உள்ளூர் மக்கள் வாகன வடிவ ஓட்டலை பார்க்க குவிகின்றனர்.

இதுகுறித்து கிருஷ்ண பிரசாத் கூறும்போது, “எங்கள் ஓட்டலில் ஆந்திரா, பஞ்சாப் வகை உணவு வகைகளை வழங்குகிறோம். ஓட்டலில் ‘லஞ்ச் பாக்ஸ்’ கொண்டு சாப்பாடு பரிமாறப்படுகிறது. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, மீதம் இருந்தால் அவற்றை அதே பாக்ஸில் வீட்டுக்கு கொண்டு செல்லலாம். ஓட்டலின் வியப்பூட்டும் தோற்றம், சுவையான உணவு வகைகளால் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x