Published : 18 Jan 2023 06:01 AM
Last Updated : 18 Jan 2023 06:01 AM
புதுடெல்லி: கடந்த 2022-ல் மாநிலங்களவையில் தமிழக எம்பிக்களின் நடவடிக்கைகள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளன. இவற்றை, சமூக ஆய்வு அமைப்பான பிஆர்எஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், விவாதங்களின் முன்மொழிதலை தவிர்த்து, பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன்ஸ் சார்பில் தனியாக தரவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, திமுக எம்பியான கனிமொழி சோமு முதலிடம் வகிக்கிறார். இவர், 125 கேள்விகளை எழுப்பியதுடன், 11 சுயமுயற்சி விவாதங்களில் பேசி தமிழகத்தின் இதர எம்பிக்களை விட அதிகமாக 136 புள்ளிகள் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, திமுகவின் வழக்கறிஞர் பி.வில்சனுக்கு 131 புள்ளிகள் கிடைத்துள்ளன. இவர், 17 சுயமுயற்சி விவாதங்களில் பேசி, 111 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் துணை சபாநாயகரான அதிமுகவின் என்.தம்பிதுரை, 38 புள்ளிகள் பெற்றாலும் மிக அதிகமாக 36 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று 2 கேள்விகளை மட்டும் எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சர்களில் காங்கிரஸின் ப.சிதம்பரம் வெறும் 4 சுயமுயற்சி விவாதங்களில் மட்டும் பங்கேற்றதால் 4 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன. 49 கேள்விகளை எழுப்பிய பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு 50 புள்ளிகள் கிடைத்துள்ளன. மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான தமாகாவின் வாசன் 27 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்றதால் அவருக்கு 27 புள்ளிகள் கிடைத்துள்ளன.
மக்களவையில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் 18 எம்பிக்களுக்கும் கிடைக்கின்றன. எனினும், அதிமுகவின் ஆர்.தர்மர், என்.சந்திரசேகரன், சி.வி.சண்முகம் மற்றும் திமுகவின் பி.செல்வராசு ஆகிய நால்வரின் நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், அவர்கள் ஒரு புள்ளியைக் கூடப் பெற முடியவில்லை.
அதேபோல், 18 எம்பிக்களில் திமுகவின் மூத்த எம்பியான திருச்சி சிவா மட்டுமே அதிகமாக 95 சதவீத நாட்கள் வருகை புரிந்துள்ளார். அதைவிடக் குறைவாக வருகை புரிந்த மற்றவர்களில் 5 எம்பிக்கள் வருகை ஐம்பது சதவீதத்துக்கும் குறைவானது. இந்த 18 எம்பிக்களில் பி.வில்சன் 3, திருச்சி சிவா 1 தவிர வேறு எவரும் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யவில்லை.
நாடாளுமன்றத்தின் நிரந்தர அவையான, மாநிலங்களவையில் தமிழகத்திலிருந்து 18 எம்பிக்கள் இடம் பெறுகின்றனர். அவர்கள் ஆறு ஆண்டு பணிக்கு பின்சுழற்சி முறையில் மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். கடைசியாக ஜுலை 2022-ல் ஆறு எம்பிக்கள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களால் புதிதாகத் தேர்வாகினர். இவர்கள் இடத்தில் பணிசெய்த ஆறு எம்பிக்களின் ஆறுவருடங்களுக்கான முழுப் பணிக்காலத் தரவுகளையும் ஆய்வு செய்து பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிமுக எம்பியான ஏ.விஜய்குமார் 476 கேள்விகளை எழுப்பி, 38 சுயமுயற்சி விவாதங்களுடன் 514 புள்ளிகள் பெற்றுள்ளார். இதே கட்சியின் நவநீதகிருஷ்ணனுக்கு 120 புள்ளிகள் கிடைத்துள்ளன. மற்றொரு அதிமுக எம்பியான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலா 45 சுய முயற்சி விவாதங்கள் மற்றும் கேள்விகளுடன் 45 புள்ளிகளை பெற்றுள்ளார்.
மீதமுள்ள 2 திமுக எம்பிக்கள் பெற்ற புள்ளிகளில் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 97, ஆர்.எஸ்.பாரதிக்கு 40. ஆனால், இந்த ஆறு எம்பிக்களில் ஒருவர் கூட தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment