Published : 17 Jan 2023 07:27 PM
Last Updated : 17 Jan 2023 07:27 PM
புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளை கடமைக் காலமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற பாஜகவின் 2 நாட்கள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நிறைவடைந்தது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சியின் தேசியத் தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்சியின் தலைவராக ஜெ.பி.நட்டா தொடரும் வகையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்ட்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: பிரதமரின் பேச்சு ஓர் அரசியல் தலைவரின் பேச்சாக இருக்கவில்லை. அது நாட்டின் தலைவரின் பேச்சாக இருந்தது. கட்சிக்கு மேலான இடத்தில் நாட்டை வைத்து அவர் பேசினார்.
''இந்தியாவுக்கு இதுதான் மிகச் சிறந்த நேரம். இதை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளை நாம் அமிர்த காலம் என கூறி வருகிறோம். இதனை நாம் கடமைக்கான காலமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டின் வளர்ச்சி அபிரிமிதமானதாக இருக்கும்'' என பிரமதர் தெரிவித்தார்.
அதோடு, ''கடந்த ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் 18-25 வயது உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. தற்போதைய அரசின் செயல்பாட்டால் நாடு எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகிறது என்பது குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு நம்மோடு இணைக்க வேண்டும். வாக்கு வங்கிக்காக இதைச் செய்யக்கூடாது. அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும் எனும் நோக்கில் இது இருக்க வேண்டும்'' என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், ''ரசாயன உரங்களால் நிலங்கள் மாசு அடைந்துள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசோடு இணைந்து பாஜகவும் பாடுபட வேண்டும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு இணங்க நமது மாநிலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மற்ற மாநிலங்களின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் பின்பற்ற வேண்டும். எல்லையை ஒட்டிய கிராமங்களில் வாழும் மக்களை நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களோடு இணைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக ஒருங்கிணைக்க வேண்டும்'' என பிரதமர் தெரிவித்தார் என தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...