Published : 16 Jan 2023 02:35 PM
Last Updated : 16 Jan 2023 02:35 PM

திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்குவது குறித்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் திருமண பாலியல் வல்லுறவு (மேரிட்டல் ரேப்) என்பதைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பான மனுக்களுக்கு மத்திய அரசு வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை மார்ச் 21-ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

திருமண பாலியல் வல்லுறவைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய மாறுபட்ட தீர்ப்பினை எதிர்த்து, அந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான குஷ்பூ சைஃபி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, இது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ஷக்தேக் தலைமையிலான டிவிஷனல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ராஜீவ் சக்தேவ் மற்றும் ஹரிசங்கர் அடங்கிய அமர்வு, வழக்கினை விசாரணை செய்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தனர். என்றாலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை அறியவேண்டிய பல்வேறு சட்ட கேள்விகளைக் கெண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்திருந்தனர்.

‘அரசியலமைப்புக்கு எதிரானது என்பதற்காக, இந்திய தண்டனைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 162 ஆண்டுகள் கழிந்த பின்னரும் திருமணமான ஒரு பெண்ணின் நீதிக்கான குரலுக்கு செவி சாயக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் உள்ள இந்த விதிவிலக்கு அரசியல் அமைப்பு எதிரானது இல்லை, கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது’ என்று நீதிபதி ஷக்தேக் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற வழக்கு ஒன்றில் கர்நாடகா உயர் நீதிமன்றம், கடந்தாண்டு மார்ச் 23-ம் தேதி தனது மனைவியின் விருப்பத்துக்கு மாறாகவும், இயற்கைக்கு விரோதமாகவும் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டில் கணவருக்கு விதிவிலக்கு அளிப்பது அரசியலமைப்பு பிரிவு 14 (சட்டத்தின் முன் அனைவரம் சமம்)-க்கு எதிரானது எனத் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட கணவர், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் சிலர், ஐபிசி 375 பிரிவின் (பாலியல் வன்புணர்வு)படி, திருமண பாலியல் வல்லுறவுக்கு விதிவிலக்கு அளிப்பது, கணவர்களால் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்படும் திருமணமான பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

மனைவி மைனராக இல்லாத பட்சத்தில், கணவர் ஒருவர் மனைவியுடன் கொள்ளும் பாலியல் உறவு என்பது பாலியல் வன்புணர்வு ஆகாது என்று ஐபிசி பிரிவு 375 விதிவிலக்கு அளிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x