Published : 16 Jan 2023 12:00 PM
Last Updated : 16 Jan 2023 12:00 PM
புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்கள் இன்றும் குளிரான காலைப் பொழுதினையே எதிர்கொண்டனர். குறைந்த பட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி குறைந்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை 4.7 டிகிரி செல்சியஸாகவும், சனிக்கிழமை 10.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.
பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியாணாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.
இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என கணித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பனி மூட்டம் காரணமாக, வடக்கு ரயில்வே பகுதியில் 13 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அதிகமான குளிர் காரணமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு ஜன.17ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மீரட் மாவட்ட நிர்வாகம் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அதே போல அதிக குளிர் காரணமாக, யூனியன் பிரதேசமான சண்டிகரில் குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT