Published : 16 Jan 2023 05:04 AM
Last Updated : 16 Jan 2023 05:04 AM
புதுடெல்லி: செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, விழாக்கள் கொண்டாடப்படும் இந்த மங்களகரமான சூழலில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பாரம்பரியத்தை இணைக்கும் மாபெரும் பரிசை இரு மாநிலங்களும் பெறுவதாகக் குறிப்பிட்டார். பண்டிகைகளை ஒட்டி, இரு மாநில மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்திய அவர், இந்திய ராணுவம் வீரத்திற்குப் பெயர் பெற்றது எனக் கூறினார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் பண்டிகைகளைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் இணைக்கவும் வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய ரயில்வேயும் நாட்டின் நீளம் மற்றும் அகலங்களைக் கடந்து ஒரே பாரதமாக இணைப்பதாக குறிப்பிட்டார்.
வந்தே பாரத் விரைவு ரயில் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையிலான பயண நேரம் குறையும் என்றும் தெரிவித்தார்.
"வந்தே பாரத் புதிய இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம்" என்று கூறிய பிரதமர், "இது விரைவான வளர்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இந்தியாவின் சின்னம்" என்றார். தனது கனவுகள் மற்றும் லட்சியத்தை நோக்கி ஆர்வமாக இருக்கும் இந்தியாவை, தனது இலக்கை அடைய விரும்பும் இந்தியாவை, சிறந்து விளங்க பாடுபடும் இந்தியாவை, தனது குடிமக்களுக்கு சிறந்ததை வழங்க விரும்பும் இந்தியாவை இந்த ரயில் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். அடிமை மனப்பான்மையை உடைத்து தற்சார்பை நோக்கி இந்தியா செல்வதாகவும் பிரதமர் கூறினார்.
வந்தே பாரத் ரயில்கள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளின் வேகத்தையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் இரண்டாவது வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்படுவதாகவும், இது களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் வேகத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வந்தே பாரத் ரயில்களின் உள்நாட்டுத் தயாரிப்பையும், மக்கள் மனதில் அவற்றின் தாக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். பூமியை 58 முறை சுற்றி வருவதற்குச் சமமாக, 7 வந்தே பாரத் ரயில்கள் 23 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் எனவும் பிரதமர்குறிப்பிட்டார்.
"இணைப்பு தொடர்பான உட்கட்டமைப்பு இரண்டு இடங்களை இணைப்பது மட்டுமல்லாமல் கனவுகளை யதார்த்தத்துடனும், உற்பத்தியை சந்தையுடனும், திறமையை சரியான தளத்துடனும் இணைப்பதாகப் பிரதமர் கூறினார். வளர்ச்சியின் சாத்தியங்களை இணைப்பு விரிவுபடுத்துவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். “எங்கெல்லாம் கதி (வேகம்) இருக்கிறதோ அங்கே பிரகதி (முன்னேற்றம்) இருக்கிறது எனவும், முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் செழிப்பு உறுதி” என்றும் பிரதமர் கூறினார்.
நவீன கால இணைப்பின் பலன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயன்பட்ட காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், விலை உயர்ந்த போக்குவரத்து அதிக நேரத்தை வீணடித்ததால் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டதாகக் கூறினார். வந்தே பாரத் ரயில், அந்த சிந்தனையை விட்டு விலகி, வேகம் மற்றும் முன்னேற்றத்துடன் அனைவரையும் இணைக்கும் பார்வைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நல்ல மற்றும் நேர்மையான நோக்கத்துடன், இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டபோது, ரயில்வேயின் மோசமான பிம்பங்களும், அணுகுமுறையும் மாறியது என்றும், கடந்த எட்டு ஆண்டுகளில், இதுவே இந்திய ரயில்வேயை மாற்றியமைத்த மந்திரம் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இன்று இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது இனிமையான அனுபவமாக மாறி வருகிறது என்றும் பிரதமர் கூறினார். பல ரயில் நிலையங்கள் நவீன இந்தியாவின் பிம்பத்தை பிரதிபலிப்பதாகவும், "கடந்த 7-8 ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகள், வரும் 7-8 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயை மாற்றும்" என்றும் அவர் கூறினார். சுற்றுலாவை மேம்படுத்த விஸ்டாடோம் பெட்டிகள் மற்றும் பாரம்பரிய ரயில்கள், விவசாய பொருட்களை தொலைதூர சந்தைகளுக்கு கொண்டு செல்ல கிசான் ரயில், 2 டசனுக்கும் அதிகமான நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என எதிர்காலத்திற்கான விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு வேகமாக உருவாகி வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தெலங்கானாவில் கடந்த 8 ஆண்டுகளில் ரயில்வே தொடர்பாக செய்யப்பட்டுள்ள விரைவானப் பணிகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, தெலங்கானா மாநில ரயில்வேக்கு ரூ.250 கோடிக்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டதாகவும், இன்று அது ரூ.3000 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தெலங்கானாவின் மேடக் போன்ற பல பகுதிகள் இப்போது தான் முதல் முறையாக ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் தெலங்கானாவில் 125 கிலோ மீட்டருக்கும் குறைவான புதிய ரயில் பாதைகளே அமைக்கப்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளில் தெலங்கானாவில் சுமார் 325 கிலோமீட்டருக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தெலங்கானாவில் 250 கிலோமீட்டருக்கும் அதிகமான ‘டிராக் மல்டி-டிராக்கிங்’ பணியும் செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாநிலத்தில் ரயில் பாதைகளை மின்மயமாக்குவது 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தெலங்கானாவில் உள்ள அனைத்து அகலப்பாதை வழித்தடங்களிலும் மின்மயமாக்கும் பணிகளை மிக விரைவில் முடிக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
வந்தே பாரத் ரயில் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். எளிமையாக வாழ்வதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் 350 கிலோமீட்டர் புதிய ரயில் பாதைகள் மற்றும் சுமார் 800 கிலோமீட்டர் மல்டி டிராக்கிங் கட்டுமானப் பணிகள் ஆந்திராவில் முடிவு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். 2014-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், ஆந்திராவில் கடந்த அரசின் போது ஆண்டுக்கு 60 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, இப்போது ஆண்டுதோறும் 220 கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“இந்த வேகமும் முன்னேற்றமும் இப்படியே தொடரும்” என்று கூறியதோடு, தெலங்கானா மற்றும் ஆந்திரா இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னணி
இது இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். இதன் மூலம் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் பயண நேரம் பன்னிரண்டரை மணி நேரத்திலிருந்து எட்டரை மணி நேரமாகக் குறையும்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும்.
வந்தே பாரத் விரைவு ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும். இந்த ரயில் புறப்பட்ட 52 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
Glad to flag off Vande Bharat Express between Secunderabad and Visakhapatnam. It will enhance 'Ease of Living', boost tourism and benefit the economy. https://t.co/FadvxI0ZNQ
— Narendra Modi (@narendramodi) January 15, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT