Published : 15 Jan 2023 06:23 AM
Last Updated : 15 Jan 2023 06:23 AM
புதுடெல்லி: வடஇந்தியாவை சேர்ந்த சுதர்சன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனல், யுபிஎஸ்சி ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேபோல அரசியல் தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள், சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டுவது உள்ளிட்டவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி நாகரத்னா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் நிசாம் பாஷா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அவர்கள் கூறும் போது, “தொலைக்காட்சி சேனல்கள் வெறுப்புணர்வு, பிரிவினையை தூண்டும் வகையில் நிகழ்ச்சி, செய்திகளை ஒளிபரப்பு செய்துவருகின்றன. இதை தடுக்க கேபிள்டிவி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும்போது, “ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டை பின்பற்றி வருகின்றன. தேசிய நலன், தேசத்தின்பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும்போது மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. அரசியல் தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுக்க சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பான சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவை மத்தியஸ்தராக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. தொலைக்காட்சி சேனல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுக்க சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது தொடர்பாக5 பக்க பரிந்துரைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன்பிறகு நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா கூறியதாவது: வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதை தடுக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும்.
பல்வேறு விவகாரங்களில் தொலைக்காட்சி சேனல்கள் சமூகத்தில் பிரிவினையை தூண்டி வருகின்றன. அச்சு ஊடகங்களுக்காக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு உள்ளது. மின்னணு ஊடகங்களுக்காக இதேபோன்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏர் இந்தியா விமான பயணத்தில், பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பான வழக்கில் தொலைக்காட்சி ஊடகங்கள் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், விசாரணை கைதி. அதற்கு முன்பே அவரை ஊடகங் கள் குற்றவாளியாக சித்தரித்து வருவது எந்த வகையில் நியாயம்?
சர்ச்சைக்குரிய வகையில் விவாதங்களை நடத்தும் தொகுப்பாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? தொலைக்காட்சி சேனல்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
வழக்குகள் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT