Published : 15 Jan 2023 06:05 AM
Last Updated : 15 Jan 2023 06:05 AM
சிம்லா: கடந்த ஆண்டு மே மாதம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் (காங்கிரஸ்), பஞ்சாபிலும் (ஆம் ஆத்மி) பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்தப் பட்டியலில் இமாச்சல் பிரதேசமும் இணைந்துள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக பதவி ஏற்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு இந்த வாக்குறுதி முக்கியக் காரணமாகும். இந்நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக சுக்விந்தர் சிங் சுக்கு அறிவித்துள்ளார்.
இது குறித்து இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் கூறுகையில், “அரசு ஊழியர்களின் சமூகபாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். அனைத்து கோணங்களிலும் அலசப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT