Published : 14 Jan 2023 04:23 PM
Last Updated : 14 Jan 2023 04:23 PM
கொல்கத்தா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமானவையாக இருக்கும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எண்ணுகிறேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, திமுக ஒரு முக்கியமான கட்சி. திரிணாமூல் காங்கிரஸும் முக்கியமான கட்சிதான். சமாஜ்வாதி கட்சிக்கு சில நிலைப்பாடுகள் உள்ளன. எனினும், அந்தக் கட்சியின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
இந்துக்களுக்கு ஆதரவான, தொலைநோக்குப் பார்வை கொண்ட கட்சியாக பாஜக இருக்கிறது; அந்தக் கட்சிக்கு மாற்றாக வேறு எந்த ஒரு கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறு என்று நான் நினைக்கிறேன். இது புறக்கணிக்கப்பட வேண்டிய முடிவு. இந்தியாவின் பார்வையை, பாஜக பெருமளவு குறைத்துவிட்டது. இந்தியா என்றால் அது இந்து இந்தியா, இந்தி பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பதாக அது குறுக்கிவிட்டது. அப்படி இருக்கும்போது, இன்றைக்கு அந்தக் கட்சிக்கு மாற்று இல்லாதது வேதனையானது.
பாஜக பார்ப்பதற்கு வலிமையாகவும், அதிகாரம் மிக்கதாகவும் தெரிகிறது. எனினும், அந்தக் கட்சியிடமும் பலவீனங்கள் இருக்கின்றன. எனவே, பாஜகவை எதிர்க்கும் எண்ணம் உண்மையாகவே இருந்தால் எதிர்க்கட்சிகள் இவற்றை விவாதமாக்க முன்வர வேண்டும். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர விடாமல் தடுக்கும் சக்தி அக்கட்சிக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
நாட்டின் அடுத்த பிரதமராகும் திறமை மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சக்திகளை ஒன்று திரட்டவும், பிரிவினைவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அவரால் முடியும் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
காங்கிரஸ் மிகவும் பலவீனமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் கட்சியை ஒருவர் எவ்வளவு நம்பலாம் என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அகில இந்திய தொலைநோக்கு பார்வை, வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. அதோடு, காங்கிரஸ் மீண்டும் பிளவுபட்டுள்ளது'' என்று அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT