Published : 14 Jan 2023 01:37 PM
Last Updated : 14 Jan 2023 01:37 PM

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மறைவு: இந்திய ஒற்றுமை யாத்திரை தற்காலிக நிறுத்தம்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி

லூதியானா: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவை அடுத்து, சனிக்கிழமை யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை லூதியானா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார். யாத்திரையின் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சந்தோக் சிங் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் பக்வாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வயது 77.

இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர், அமரேந்திர சிங் ராஜா வாரிங் கூறியது: “இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று நிறுத்தப்படுகிறது. மறைந்த காங்கிரஸ் எம்.பி.யின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நான் இன்னும் ராகுல் காந்தியுடன் பேசவில்லை. ஆனால், இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் யாத்திரைத் தொடரலாம் என்று விரும்புகிறோம். அதனால், மறைந்த எம்.பி.யின் இறுதிச் சடங்கு முடியும் வரை யாத்திரை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜலந்தரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் எதிர்பாராத அதிர்ச்சியான மறைவைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது. அந்தச் சந்திப்பு ஜனவரி 17-ம் தேதி நடைபெறும்.

ஜலந்தர் தொகுதி எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி, இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றிருக்கும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். அன்னாரது குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை முன்னிட்டு யாத்திரையில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. அவை விரைவில் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கல் குறிப்பில், "எங்களுடைய ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மறைந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பு. இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் நண்பர்கள், தொண்டர்களின் துக்கத்தில் நான் பங்கெடுத்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். இந்த துயர்மிகுந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மாவிற்கு வாஹ்குரு ஜி அமைதி அளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது இரங்கல் குறிப்பில், "சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவர் கட்சியின் கடைசி மட்டம் வரை தொடர்பில் இருந்த கடின உழைப்பாளி, நல்ல மனிதர். காங்கிரஸ் குடும்பத்திற்கு வலிமையான தூணாக இருந்த அவர், இளமையிலிருந்து எம்பியானது வரை தனது வாழ்வை பொது வாழ்க்கைக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவத்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x