Published : 14 Jan 2023 05:15 AM
Last Updated : 14 Jan 2023 05:15 AM
புதுடெல்லி: இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பொம்மைகள் பிஐஎஸ் தரக் குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கும் பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
இந்நிலையில், பிஐஎஸ் அமைப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கடந்த ஒரு மாதமாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஹேம்லிஸ், ஆர்ச்சிஸ், டிபிள்யூஎச் ஸ்மித், கிட்ஸ் ஸோன், கோகோகார்ட் உட்பட முன்னணி விற்பனை நிலையங்களிலிருந்து பிஐஎஸ் தரக் குறியீடு இல்லாத மற்றும் போலி குறியீட்டைக் கொண்ட 18,600 பொம்மைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிஐஎஸ் இயக்குநர் பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னையில் உள்ள விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் சோதனை மேற்கொண்டோம். மொத்தம் 44 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 18,600 தரக் குறியீடு இல்லாத பொம்மைகளைக் கைப்பற்றியுள்ளோம். அடுத்தகட்டமாக சிறு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களிடம் சோதனை மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT