Published : 14 Jan 2023 06:11 AM
Last Updated : 14 Jan 2023 06:11 AM
புதுடெல்லி: டெல்லியின் கன்ஜவாலா பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை, இளம்பெண் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அப்போது, காரின் பக்கவாட்டில் சிக்கிய இளம்பெண்ணுடன் 12 கி.மீ. தூரம் காரை ஓட்டி சென்றுள்ளனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
14 நாட்கள் நீதிமன்ற காவல்
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அன்குஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட 6 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசா ரணை நடத்த சிறப்பு ஆணையர் ஷாலினி சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தவிசாரணைக் குழு தனது அறிக்கையை டெல்லி போலீஸாரிடம் சமர்ப்பித்தது. மேலும், பணியில் அலட்சியமாக இருந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, டெல்லி போலீஸுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சம்பவம் நடந்த புத்தாண்டு அன்று சுல்தான்புரி - கன்ஜவாலா பகுதிகளில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன்களில் பணியில் இருந்த 11 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூத்த அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ரோகினி மாவட்ட போலீஸார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT