Published : 12 Jan 2023 06:58 PM
Last Updated : 12 Jan 2023 06:58 PM
புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களால் ஆன பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தால், ராமர் பாலம் சிதைந்துபோகும், எனவே, அந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்தார். அந்த மனுவில், ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை கோரிய தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, "கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ராமர் பாலத்தை பாரம்பரிய புராதான சின்னமாக அறிவிக்க முடியுமாம், முடியாதா என்பதே இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்வி. ஆனால், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.
அப்போது மத்திய அரசு தரப்பில், "இந்த வழக்கில் பதில் மனு தயாராகிவிட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை தாக்கல் செய்ய கூடுதலாக கால அவகாசம் வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசு சார்பாக இன்னும் எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை என்று மீண்டும் குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஏன் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த வழக்கை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி, "ஏற்கெனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருந்த நிலையில் தற்போது அதை மாற்றி கூறுகின்றனர். இது அமைச்சரவை தொடர்பான விவகாரம் என்பதால் அமைச்சரவை செயலாளருக்கு சம்மன் அனுப்ப வேண்டும்" என்றார்.
இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இந்த மனுவுக்கு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT