Published : 12 Jan 2023 01:29 PM
Last Updated : 12 Jan 2023 01:29 PM
புதுடெல்லி: அரசு பணத்தில் அரசியல் விளம்பரம் செய்தற்காக ரூ.164 கோடியை திருப்பி செலுத்தும்படி, ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி தகவல் மற்றும் விளப்பரத் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நாட்களுக்குள் இந்தத் தொகையைத் திருப்பி செலுத்தத் தவறினால் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கடந்த டிச.-20-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அரசு பணத்தை அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதற்காக ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ரூ.97 கோடியை வசூலிக்கும்படி டெல்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதன்கிழமை இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் தகவல் மற்றும் விளம்பரத்துறை இயக்குநரகத்தின் அந்த நோட்டீஸில், "இதன் மூலம், ரூ.163 கோடியே 61 லட்சத்து 88 ஆயிரத்து 265 பணத்தினை திருப்பி செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் இதில் கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த தொகையில் ரூ.99 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 053, 2017 மார்ச் 31 ம் தேதி வரை செலவு செய்த விளப்பரத்துக்கான தொகை என்றும், மீதமுள்ள ரூ. 64 கோடியே 30 லட்சத்து 78 ஆயிரத்து 212 அதற்கான வட்டி” என்று தெரிவித்தார்.
நோட்டீஸ் குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெல்லியின் அரசு அதிகாரிகளை துணை நிலை ஆளுநர், பாஜகவும் தவறாக வழிநடத்துகின்றனர். எந்த விதமான பொது சேவையினையும் செய்யாமல் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களையும் ஆம் ஆத்மி கட்சியையும் குறிவைத்து செயல்படுகின்றனர். அதனால்தான் அவர்கள் "சேவைகள்" தொடர்ந்து கட்டுப்பாடு செலுத்த விரும்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அரசு பணத்தில், அரசியல் விளம்பரம் செய்ததற்காக அக்கட்சியிடமிருந்து ரூ.97 கோடியை திரும்ப வசூலிக்கும்படி டெல்லி துணை நிலை ஆளுநர் அம்மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். அப்போது இதற்கு பதில் அளித்திருந்த ஆம் ஆத்மி கட்சி, "அப்படி உத்தரவிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர், சவுரப் பரத்வாஜ், "நாங்கள் தேசிய கட்சியாக வளர்ந்து விட்டோம், டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி விட்டோம் என்பதால் பாஜக கொதிப்படைந்துள்ளது. துணைநிலை ஆளுநர் பாஜகவின் வழிகாட்டுதல் படி செயல்படுகிறார், அது டெல்லி மக்களை துன்பத்துக்குள்ளாகிறது. டெல்லி மக்கள் எவ்வளவு துன்பத்துக்குள்ளாகுகிறார்களோ, அந்த அளவுக்கு பாஜகவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
பாஜக ஆட்சியில் இல்லாத டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT