Published : 12 Jan 2023 05:56 AM
Last Updated : 12 Jan 2023 05:56 AM
புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது:
வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமாக ஜொலிக்கிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது என்று உலக வங்கி புகழாரம் சூட்டியிருக்கிறது.
ஜி-20 அமைப்பில் அதி வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) கணித்துள்ளது.
தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச நிதி சேவை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லியின் கூற்றுப்படி, அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்றுசர்வதேச மேலாண்மை நிறுவனமான மெக்கின்சி துல்லியமாக கணித்திருக்கிறது.
பிரபல சர்வதேச வங்கி அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில், பெரும்பாலான சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதையே அதிகம்விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. வலுவான ஜனநாயகம், இளைஞர் சக்தி, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றால் இந்தியா அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
நிலையான அரசு, தீர்க்கமாக முடிவெடுக்கும் அரசு, நேர்மையான நோக்கத்துடன் செயல்படும் அரசு நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது முதல் ‘சீர்திருத்தம், மாற்றம், செயல்திறன்' என்ற லட்சிய பாதையில் இந்தியா பயணம் செய்கிறது. நாட்டின் நலன் தொடர்பான விவகாரங்களில் விரைந்து முடிவு எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் நாடு அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம் நாட்டின் வளர்ச்சியை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரு நாடு ஒரே வரி (ஜிஎஸ்டி) திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இருந்த தடைகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு, சுரங்கம், விண்வெளி உள்ளிட்ட முக்கிய துறைகள் தனியாருக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டு உள்ளன. எளிதாக தொழில் தொடங்க ஏதுவாக ஒற்றை சாளர நடைமுறை அமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை மூலம் இதுவரை சுமார் 50,000 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தி உற்பத்தியில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு அண்மையில் தேசிய ஹைட்ரஜன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ஹைட்ரஜன் எரிசக்திக்கு அதிக தேவை இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT