Last Updated : 01 Dec, 2016 09:37 PM

 

Published : 01 Dec 2016 09:37 PM
Last Updated : 01 Dec 2016 09:37 PM

ஜல்லிக்கட்டு தடையை மாற்றும் வகையில் மத்திய அரசு எப்படி உத்தரவு பிறப்பிக்கலாம்?- உச்ச நீதிமன்றம் கேள்வி

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை மாற்றும் வகை யில் மத்திய அரசு எப்படி உத்தரவு பிறப்பிக்கலாம்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சட்டரீதியாக தமிழக அரசு போராடி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து கடந்த ஜனவரி 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு செல்லுமா என்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று நடந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜல்லிக்கட்டு போட்டி கள் தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெறும் விளையாட்டு. இனி, காளைகள் எந்த விதத்திலும் துன் புறுத்தப்பட மாட்டாது. மதுபானம் உள்ளிட்டவற்றை வாயில் ஊற்றுவது போன்ற தவறு நடத்தாத வகையில் பார்த்துக்கொள்வோம்.

ஜல்லிக்கட்டு என்பது பொழுது போக்கு நிகழ்ச்சி அல்ல. கிராமம் சார்ந்த விழா. அத்தகைய விழாவை நீதிமன்றம் தடுக்கக் கூடாது. சாதாரண கிராம மக்களை ‘எப்1 பார்முலா ரேஸ்’ போன்ற உயர்தர போட்டிகளை கண்டு ரசிக்கும்படி கூற முடியாது. எனவே, ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘ஜல்லிக் கட்டு போட்டி நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், அந்த தீர்ப்பை மாற்றும் வகையில் நீங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டி களுக்கு அனுமதி அளிக்கக் கோரி, சில அமைப்புகள் சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் விசாரிக்க மறுத்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x