Published : 11 Jan 2023 05:21 PM
Last Updated : 11 Jan 2023 05:21 PM

“இஸ்லாமியர்கள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - பிருந்தா காரத்

பிருந்தா காரத் | கோப்புப் படம்

புதுடெல்லி: இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறிய கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

மோகன் பாகவத் நேர்காணல்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அந்த அமைப்பின் பத்திரிகைகளான ஆர்கனைசர் மற்றும் பாஞ்சசன்யாவுக்கு சமீபத்தில் நேர்காணல் அளித்திருந்தார். அதில், ''எளிமையான உண்மை இதுதான் - ஹிந்துஸ்தான் ஹிந்துஸ்தானாகவே தொடர வேண்டும். நமது நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் மதத்தை பின்பற்ற விரும்பினால் பின்பற்றலாம். அவர்கள் தங்கள் முன்னோர்களின் மதத்திற்கு திரும்ப விரும்பினால் திரும்பலாம். முற்றிலும் இது அவர்களின் விருப்பம் சார்ந்தது. அவர்களை மாற்ற வேண்டும் என்ற பிடிவாதம் இந்துக்களிடம் இல்லை.

இஸ்லாம் குறித்து பயப்பட ஒன்றுமில்லை. அதேநேரத்தில், மேலாதிக்கம் செய்ய வேண்டும் என்ற ஆவேசப் பேச்சுக்களை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். இந்தியாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

பிருந்தா காரத் கடும் கண்டனம்: மோகன் பாகவத்தின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத், ''ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது தூண்டக் கூடியதாகவும், எதிர்க்கக் கூடியதாகவும் உள்ளது. அவரது இந்தக் கருத்து குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும்.

இந்தியாவில் வசிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் (மோகன் பாகவத்) வரையறை வகுப்பாரா? மோகன் பாகவத்தும் ஹிந்துத்துவ தலைவர்களும் அரசியல் சாசனத்தை குறிப்பாக பிரிவு 14 மற்றும் 15-ஐ படிக்க வேண்டும். அதில், மதத்திற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனும் சமம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் குடிமகன்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மோகன் பாகவத் தீர்மானிப்பாரா? முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் தலைவர் மறைந்த மாதவ சதாசிவ கோல்வால்கர் கூறி இருந்தார். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவரும் கூறி இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர்களுக்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் மோகன் பாகவத் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x