Published : 11 Jan 2023 02:38 PM
Last Updated : 11 Jan 2023 02:38 PM
ஜோஷிமத்: கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தராகண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒருநாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
பாஜவைச் சேர்ந்த உமா பாரதி, நிலவெடிப்பு காரணமாக மண்ணில் புதைந்துவரும் ஜோஷிமத் நகருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளனர். இந்தக் கொள்கை வகுப்பாளர்கள் உத்தராகண்டை ஒருநாள் இல்லாமல் செய்துவிடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.
நான் கடந்த 2017-ம் ஆண்டே என்டிபிசி திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இந்தத் திட்டம் மீளமுடியாத இழப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்திருந்தேன். அப்போது அதற்கு மத்திய அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. ரெனி கான் சம்பவம் நிகழ்ந்தது. அப்போதும் ‘ஜோஷிமத் ஒருநாள் இதேபோன்ற சம்பவத்தை சந்திக்கும்’ என்று தெரிவித்தேன். பின்னர், அது தொடர்பாக பிரதமர் அலுவலத்தில் இருந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்போது ஜோஷிமத் புதையவில்லை.
அதன்பின்னர், புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அது, 50 சதவீதம் முடிவடைந்த திட்டங்களுக்கு மீண்டும் அனுமதி அளித்தது. அதன்பின்னர் அது என்டிபிசி திட்டத்திற்கு கீழ் வந்தது. இப்போது ஜோஷிமத் புதையும் விவகாரத்தில் என்டிபிசியின் பங்கு என்ன என்று நிபுணர்கள் கூறுவார்கள். நான் இப்போது அதைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை.
நான் சோனியா காந்திக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தும் நேரம் இல்லை. நமக்கு இருக்கும் பெரிய பொறுப்பு, அந்த இடத்தை காலி செய்யவேண்டியது. வளர்ச்சியும் அழிவும் ஒன்றாக இருக்க முடியாது. வளர்ச்சியும் நம்பிக்கையும் இணைந்தே இருக்கும். வளர்ச்சி, மனித வாழ்க்கை, சுற்றுச்சூழல் அனைத்தும் ஒன்றாக இருக்கமுடியும். வளர்ச்சியும் அழிவும் ஒன்றாக இருக்க முடியாது.
உத்தராகண்ட் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. யோகி போன்ற முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இமயமலையிலிருந்து ஆசி பெற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தற்போதுள்ள இந்த சவாலும் கடந்து போகும்” என்று தெரிவித்தார்.
தபோவன் நீர்மின்திட்டம்: ஜோஷிமத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்டிபிசியின் தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டமே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் இதனை மறுத்து என்டிபிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்தின் எந்த சுரங்கப்பதையும் ஜோஷிமத் நகர் வழியாக செல்லவில்லை. என்டிபிசியின் சுரங்கப் பாதைகளுக்கும் ஜோஷிமத் நிலச்சரிவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று என்டிபிசி தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்தக் கடினமான சூழ்நிலையில் ஜோஷிமத் நகர மக்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்புலம் என்ன? - அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப்பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன.
இது இந்த மண்டலத்தின் நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலையின் டெக்னானிக்ஸ் நிபுணரும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந்திரன் எச்சரிக்கை செய்துள்ளார். அளவுக்கு அதிகமான கட்டுமானப் பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள்தோறும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக ஜோஷிமத் நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விரிவாக வாசிக்க > நகரமயமாக்கலால் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT