Published : 10 Jan 2023 04:37 PM
Last Updated : 10 Jan 2023 04:37 PM

ஜோஷிமத் நகரில் இடிக்கப்படும் வீடுகள் - கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை எண்ணி கண்ணீர் வடிக்கும் மக்கள்

இடிப்பதற்கான குறியீடு இடப்பட்ட வீடு

ஜோஷிமத்: ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் வீட்டை எண்ணி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மூழ்கும் ஜோஷிமத்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது ஜோஷிமத் நகரம். பத்ரிநாத் கோயிலுக்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகத் திகழும் இந்த நகரில் வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் உள்ளன. இங்கு சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. இதையடுத்து பாதுகாப்பற்ற கட்டிடங்களாக 678 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெளியேற்றப்படும் மக்கள்: பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, அதில் இருந்த மக்கள் வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்பற்ற கட்டிடங்களை பாதுகாப்பாக இடிக்க 8 மாநில பேரிடர் மீட்புப் படை, ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை உள்ளிட்டவை ஜோஷிமத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

கண்ணீர் வடிக்கும் மக்கள்: காலம் காலமாக வாழ்ந்து வந்த தங்கள் வீடு இடிக்கப்பட உள்ளதை நினைத்து உள்ளூர் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ''இது எனது அம்மா வீடு. எனக்கு 19 வயதில் திருமணம் ஆகியது. எனது அம்மாவிற்கு தற்போது 80 வயதாகிறது. எனக்கு ஒரு அண்ணன் உள்ளார். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த வீட்டை கட்டினோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்த வீட்டை இடிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான குறியீட்டை வீட்டின் மீது இட்டுள்ளனர். இந்த வீட்டுடனான எங்களின் இத்தனை ஆண்டு பந்தம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது'' என பிந்து என்பவர் கண்ணீர் மல்க தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

ஜோஷிமத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், ''நான் குழந்தையாக இருந்ததில் இருந்தே இங்குதான் வாழ்ந்து வருகிறேன். தற்போது இந்த வீட்டை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. நாங்கள் 8 பேர் கொண்ட குடும்பம். எங்கள் குடும்ப உறுப்பினர்களில் சிலரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி உள்ளோம். எங்களுக்கு இந்த வீட்டை விட்டால் வேறு வீடு கிடையாது'' என தெரிவித்துள்ளார்.

பின்புலம் என்ன? - அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப்பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன. இது இந்த மண்டலத்தின் நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலையின் டெக்னானிக்ஸ் நிபுணரும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந் திரன் எச்சரிக்கை செய்துள்ளார். அளவுக்கு அதிகமான கட்டுமானப் பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள்தோறும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக ஜோஷிமத் நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விரிவாக வாசிக்க > நகரமயமாக்கலால் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x