Published : 10 Jan 2023 10:01 AM
Last Updated : 10 Jan 2023 10:01 AM

'நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டி-ஷர்ட் மட்டுமே அணிகிறேன்...' - மனம் திறந்த ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி | கோப்புப் படம்.

சண்டிகர்: ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது நடுங்கும் குளிரிலும் டிஷர்ட் மட்டுமே அணிந்து செல்வது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனது யாத்திரையை ஒட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி அதற்கான விளக்கத்தை நல்கியுள்ளார்.

அவர் பேசியதாவது: நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டிஷர்ட் மட்டுமே அணிகிறேன் என்று விமர்சனங்கள் எழுகின்றன. அதற்கு நானே விளக்கம் தருகிறேன். நான் யாத்திரையை தொடங்கும்போது வெப்பமான வானிலையே இருந்தது. ஆனால் நான் பல மாநிலங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்தை எட்டியபோது குளிர் உச்சம் கண்டிருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் நான் சில தினங்களுக்கு முன்னர் 3 ஏழைச் சிறுமிகளைப் பார்த்தேன். நான் அவர்களை என்னுடன் அரவணைத்தபோது அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அன்று நான் ஒரு முடிவு எடுத்தேன். என்னால் தாங்க முடியாமல் நடுங்கவைக்கும் குளிர் என்னை வாட்டும்வரை டி ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவு செய்து கொண்டேன். அன்று குளிரில் நடுங்கிய சிறுமிகளுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் குளிரில் நடுங்கும்போது நானும் குளிரில் நடுங்குவேன். நீங்கள் ஸ்வெட்டர் அணிந்து கொள்ளும் சூழல் வரும் நாளன்று நானும் ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன் என்பதே அந்த செய்தி.

ஊடகங்கள் நான் டி ஷர்ட் அணிவதை தான் விமர்சிக்கின்றன. ஆனால் என்னோடு யாத்திரையில் கிழிந்த ஆடையில் நடக்கும் விவசாயிகள், தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. நான் டி ஷர்ட் அணிவது பிரச்சினையும் அல்ல விவாதப் பொருளும் இல்லை. உண்மையான பேசுபொருள் விவசாயிகளும், ஏழைத் தொழிலாளர்களும், குழந்தைகளும் ஏன் இன்னமும் கிழிந்த ஆடைகளில், வெறும் டி ஷர்ட்களில், ஸ்வெட்டர் கூட இல்லாமல் இருக்கின்றனர் என்பதே கேள்வி. இவ்வாறு அவர் பேசினார்.

கன்னியாகுமரி டூ காஷ்மீர்: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது 115 நாட்களைக் கடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த பயணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது ஹரியாணாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x