Published : 10 Jan 2023 05:31 AM
Last Updated : 10 Jan 2023 05:31 AM
புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரம் வருமாறு: கடந்த 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30,900- வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 6,900 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது மொத்த வழக்குகளில் 23 சதவீதமாகும். கடந்த 2020-ம் ஆண்டு பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 23,700 ஆக இருந்தது. அதன்பின், கரோனா வைரஸ் பரவல் காலத்தில் 2021-ம் ஆண்டு 30 சதவீதம் உயர்ந்து புகார்களின் எண்ணிக்கை 30,800 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு கரோனா வைரஸ் பரவலில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்த போது கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு மொத்த புகார்கள் 30,900 ஆக உயர்ந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசம் 55 சதவீதம், டெல்லி 10 சதவீதம், மகாராஷ்டிரா 5 சதவீதம் என்ற அளவில் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டில் கூட இந்த 3 மாநிலங்களில் இருந்துதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக பதிவாகின. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT