Published : 02 Dec 2016 10:14 AM
Last Updated : 02 Dec 2016 10:14 AM

ஆந்திர கோயில்களில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஆந்திர கோயில்களில் உண்டியல் காணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி உண்டியல் வருமானம் 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி இரவு அறிவித்தார். இதனால் ஆந்திர மாநிலத்தில் கோயில்களில் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது.

இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சராசரியாக ரூ.2.5 கோடி முதல் ரூ. 3 கோடி வரை பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். இந்த காணிக்கை தொகை தற் போது ரூ.3 கோடியை கடந்துள்ளது. இக்கோயிலில் குறிப்பாக கடந்த மாதம் 21-ம் தேதி ரூ. 4.18 கோடியும் 25-ம் தேதி ரூ. 3.62 கோடியும் 27-ம் தேதி ரூ. 3.90 கோடியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். விழாக்காலம் இல்லாத நேரத்தில், பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டபோதும், உண்டியல் காணிக்கை அதிகரித்துள்ளது.

விஜயவாடாவில் வீற்றிருக்கும் கனக துர்கையம்மன் கோயிலில் தினமும் சராசரியாக சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் அம்மனைத் தரிசிப்பது வழக்கம். இதன் மூலம் இக்கோயிலுக்கு மாதத்தில் ரூ.2 கோடி முதல் முதல் ரூ.2.5 கோடி வரை காணிக்கை தொகை கிடைக்கும். ஆனால் தற்போது கடந்த 20 நாட்களில் மட்டும் இக்கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 2 கோடியை கடந்துள்ளது.

இதுபோல் சிம்மாசலம் கோயிலில் கடந்த 18 நாட்களில் உண்டி யல் வருமானம் ரூ.75 லட்சத்தைக் கடந்துள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காணிப் பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார் ஜுன சுவாமி கோயில் என புகழ் பெற்ற அனைத்து கோயில்களிலும் உண்டியல் வருமானம் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் எனவும் கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x