Published : 09 Jan 2023 08:16 PM
Last Updated : 09 Jan 2023 08:16 PM
குருஷேத்ரம்: இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் வேலை செய்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ஹரியாணாவின் குருஷேத்திரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் 'ஹர ஹர மகாதேவ்' என கோஷமிட்டது கிடையாது. ஏனெனில், கடவுள் சிவன் ஒரு தபஸ்வி. இவர்கள் இந்தியாவின் தபஸ்வியை தாக்குபவர்கள். 'ஜெய் சியா ராம்' என்ற வரியில் இருந்து சீதாவை நீக்கியவர்கள் இவர்கள். இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இவர்கள் வேலை செய்து வருகிறார்கள். காக்கி அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு ஷாகா நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள். நாட்டின் 2-3 பணக்காரர்கள் பக்கம் இருக்கக்கூடியவர்கள் இவர்கள்'' என தெரிவித்தார்.
முன்னதாக, ஹரியாணாவின் சமானாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர், ‘இந்த யாத்திரை உங்கள் அடையாளத்தை மாற்றி இருக்கிறதா?’ என்று வினவினார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ''உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ அந்த ராகுல் காந்தியை நான் கொலை செய்துவிட்டேன். அந்த ராகுல் என் நினைவில் இல்லை. அவர் மறைந்துவிட்டார். இப்போது நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை. இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்குப் புரியும்.
நான் என் மனதில் எந்த அடையாளமாகவும் இல்லை. ஆனால் பாஜகவினரின் சிந்தனையில், புத்தியில் உள்ளேன். எனக்கென்று என்ன பிம்பம் இருக்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு எந்த பிம்பம் பற்றியும் அக்கறையும் இல்லை. உங்களுக்கு என்ன மாதிரியான பிம்பத்தில் என்னை உருவகப்படுத்த விருப்பமோ நீங்கள் அப்படியே செய்யலாம். எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. நான் என் பணியை செய்ய வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன்'' என கூறினார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது 115 நாட்களைக் கடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த பயணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது ஹரியாணாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...