Published : 09 Jan 2023 03:16 PM
Last Updated : 09 Jan 2023 03:16 PM

“உலகின் திறமை மிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” - பிரதமர் மோடி

இந்தூர்: “உலகின் திறமை மிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 17-வது ஆண்டு கருத்தரங்கம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி அதனை இன்று முறைப்படி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த ஆண்டு கருத்தரங்கம் பல வகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் நாம் நமது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இதையடுத்து அமிர்த காலம் தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் உலகப் பார்வை தற்போது வலுப்பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே நமது நாட்டுக்கான தூதர்கள்தான். நான் அவர்களை அவ்வாறு அழைக்கவே விரும்புகிறேன். ஒரு தூதராக உங்கள் பங்களிப்பு பல வகைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் எனும் அரசின் முன்னெடுப்புக்கான தூதர் நீங்கள், யோகா, கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றுக்கும் நீங்கள்தான் தூதர்.

நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இன்று இந்தியா பார்க்கப்படுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்த ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கத்தை ஒரு தூதரக நிகழ்வாக ஆக்க வேண்டும் என்பது மட்டும் அரசின் விருப்பவில்லை, மக்கள் பங்கேற்கும் நிகழ்வாக இதை மாற்ற விரும்புகிறோம். இந்தியா ஓர் அறிவு மையமாக மட்டும் திகழவில்லை; திறமை மிக்க மனித வளத்திற்கான தலைநகராகவும் திகழ்கிறது.

நமது இந்திய இளைஞர்களின் திறன்கள், மதிப்பீடுகள், நேர்மை, கடமை உணர்வு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தியாவின் இந்தத் திறமை மிக்க மனித வளம் உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும்” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், சூரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி, கயானா அதிபர் இர்பான் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 17-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர் கருத்தரங்கு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x