Published : 07 Jan 2023 11:54 PM
Last Updated : 07 Jan 2023 11:54 PM
புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி. சமீப ஆண்டுகளாக இவரின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரின் உதவியால் தான் அதானி இவ்வளவு செல்வத்தை சேர்க்கிறார் என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு. எதிர்க்கட்சி தரப்பில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதனை முதன்மையான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர். ஆனால், இந்த விமர்சனங்கள் பொய்யனது என்று அதானி முதல்முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன்மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடியுடனான நெருங்கிய நட்பால் தான் எனது சொத்துக்கள் அதிகரித்தன என்ற விமர்சனம் பொய்யானது. ஏனென்றால் பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம். இன்று 22 மாநிலங்களில் அதானி குழுமம் செயல்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் பாஜக ஆட்சியில் இல்லை. இடதுசாரிகள் ஆளும் கேரளாவிலும், மம்தா தீதியின் மேற்கு வங்கத்திலும், நவீன் பட்நாயக்கின் ஒடிசாவிலும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆந்திராவிலும், ஏன் கேசிஆர் ஆளும் தெலங்கானாவில் கூட அதானி குழுமம் செயல்படுகிறது.
எனவே, பாஜக ஆளும் மாநிலங்களில் அதானி குழுமம் செயல்படுகிறது என்கிற விமர்சனம் பொய்யானது. வேண்டுமென்றால் எந்த மாநில அரசுகளுடனும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று என்னால் சொல்ல முடியும். மேலும், பிரதமர் மோடி ஜியிடமிருந்து தனிப்பட்ட உதவியை நீங்கள் ஒருபோதும் பெற முடியாது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தேச நலன் குறித்தும், அதற்கான கொள்கைகள் வகுப்பது குறித்தும் வேண்டுமென்றால் அவரிடம் பேசலாம். ஆனால், அந்த கொள்கைகள் அதானி குழுமத்திற்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொருந்தும்படியாக இருந்தால் மட்டுமே அது முடியும்.
கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளில், எங்கள் வருமானம் 24 சதவிகிதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் எங்கள் கடன்கள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளன. எங்கள் சொத்துக்கள் நாங்கள் வாங்கிய கடனை விட நான்கு மடங்கு அதிகம்.
ராகுல் காந்தி எங்களைக் குறி வைத்து தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்து அரசியல் வியாபாரத்தின் ஒரு பகுதி என்றே நான் நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் ராஜஸ்தானையே இதற்கு உதாரணமாக என்னால் சொல்ல முடியும். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் அழைப்பின் பேரில் நான் ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு 68,000 கோடி ரூபாய் முதலீடுகளை நாங்கள் செய்துள்ளோம். ராகுல் காந்தியும் ராஜஸ்தானில் நாங்கள் செய்துள்ள முதலீடுகளை பாராட்டியுள்ளார். ராகுலின் கொள்கைகள் வளர்ச்சிக்கு எதிரானவை அல்ல என்று எனக்குத் தெரியும்.
சொல்லப்போனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து தான் எனது தொழில் வாழ்க்கையின் வெற்றிப்பயணம் தொடங்கியது எனலாம். தொழில் வாழ்க்கையில் எனக்கு மூன்று முறை திருப்புமுனையாக அமைந்தது. முதலாவதாக, 1985ல் ராஜீவ் காந்தியின் ஆட்சியில், எக்சிம் கொள்கை எங்கள் நிறுவனத்தை உலகளாவிய வர்த்தக நிறுவனமாக மாற்ற உதவியது. இரண்டாவதாக, 1991ல், பி.வி. நரசிம்மராவ் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் பொது நிறுவனங்களில் தனியார் கூட்டணி என்ற முறை எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. மூன்றாவதாக, குஜராத்தில் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி. இந்த 12 ஆண்டுகள் ஒரு நல்ல அனுபவம் என்று பெருமையுடன் சொல்ல முடியும். குஜராத் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலம், மாறாக அதானி நட்புக்கு அல்ல" என்று விரிவாக பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT