Published : 07 Jan 2023 08:22 PM
Last Updated : 07 Jan 2023 08:22 PM
புதுடெல்லி: "டிஜிட்டல் அந்த்யோதயாவை நோக்கிய நமது பயணத்தில், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரை உள்ளடக்குவதை உறுதி செய்வதற்கும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா சரியான முன்மாதிரியை அமைத்துள்ளது" என்று குடிரயரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
இந்த விருதுகள், டிஜிட்டல் ஆளுகையை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்களின் திறனை வெளிக் கொண்டு வந்து, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக இந்தியாவை மாற்றுவதற்கான ஒரு படியாகும்.விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசிய அவர், பொது மக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தரவுப் பகிர்வு தளம் முதல் எளிதாக வணிகம் செய்வது வரை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பலதரப்பட்ட புதுமைகளைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையை பின்பற்றும்போது, இந்தியா அறிவுப் பொருளாதாரமாக வளரும். டிஜிட்டல் அந்த்யோதயாவை நோக்கிய நமது பயணத்தில், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரை உள்ளடக்குவதை உறுதி செய்வதற்கும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா சரியான முன்மாதிரியை அமைத்துள்ளது.
டிஜிட்டல் மாற்றம் பற்றிய இந்தியாவின் பார்வையானது புத்தாக்கம், செயல்படுத்துதல் மற்றும் வாய்ப்புகள் போன்றவைகளை உள்ளடக்கியது. உலகை மிகவும் அணுகக்கூடிய மற்றும் சமமான இடமாக மாற்ற புதுமையான தீர்வுகளைக் கண்டறிய கூட்டுத் தளங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.நம் நாட்டு திறமைகளின் மதிப்பை உலக அளவில் உணர்த்துவதில் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளது.
நாம் நடைமுறையில் உள்ள கொள்கைகளைப் பயன்படுத்தி, புதுமையான மேட் இன் இந்தியா தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளுக்கான உலகளாவிய அதிகார மையமாக நம் நாட்டை நிலைநிறுத்தும் வகையில் செயல்பட முடியும். புத்தாக்க சிந்தனைகள், நுண்ணறிவு மற்றும் தீர்வுகளை உருவாக்குவதற்கு தரவுகள் அடிப்படையானதாகும் என்றும் அரசின் தரவுகளை இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் பயன்படுத்தும் வகையில், அதனை ஜனநாயகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள புதுமையான முயற்சிகளையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து, அரசு-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. நீதித்துறை, நிலப்பதிவு, உரம், பொது விநியோக முறை என அனைத்து துறைகளிலும் பொது மக்கள் எளிதாக அணுகுவதற்கும், புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நமக்கு நாமே சவால் விடும் அளவிற்கும் நமது பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT