Published : 07 Jan 2023 03:50 AM
Last Updated : 07 Jan 2023 03:50 AM
புதுடெல்லி/ கான்பூர்: வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி அயா நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸாகவும், சப்தர்ஜங் பகுதியில் 4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. அதேபோல, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, உறைநிலைப் புள்ளிகளுக்கு அருகில் இருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், “உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சண்டிகர் மற்றும் டெல்லியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும் குளிர் நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு இந்தப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில், கான்பூரில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக வியாழக்கிழமை 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மருத்துவ உதவி கிடைக்கும் முன்பே இறந்துவிட்டனர். கடும் குளிரால் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், ரத்தம் உறைவதாலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.
கான்பூரில் உள்ள இதய சிகிச்சை நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை 723 இதய நோயாளிகள் அவசர சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவுக்கு வந்துள்ளனர். இவர்களில் 41 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். 7 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 15 பேர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “இந்தக் குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்று கருதக்கூடாது. மாரடைப்புக்கு உள்ளான சிறுவர்களும் எங்களிடம் வந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT