Published : 06 Jan 2023 02:39 PM
Last Updated : 06 Jan 2023 02:39 PM
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலின்போது ஆம் ஆத்மி, பாஜக உறுப்பினர்கள் மாமன்ற அவைக்கு நடுவே வந்து கோஷங்கள் எழுப்பி மோதலில் ஈடுபட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய மேயருக்கான தேர்தல் நடைபெற இருந்தது. உள்ளாட்சி தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், மாநகராட்சியின் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயை நிறுத்தி இருந்தது ஆம் ஆத்மி கட்சி. பாஜக சார்பில் ரேகா குப்தா நிறுத்தப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி இந்த மேயர் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தது.
புதிய மேயரைத் தேர்வு செய்தவதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிலையில், மாநகராட்சி அவையின் தற்காலிக தலைவராக டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவால் நியமிக்கப்பட்டிருந்த சத்ய சர்மா, மேயர் தேர்தலுக்கு முன்பாக நியமன உறுப்பினர்களான ஆல்டர்மென்களை பதவியேற்க அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மாமன்றத்தின் முன்னால் வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி அரசுடன் ஆலோசிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாக 10 நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வந்தது. இன்று நியமன உறுப்பினர்களுக்கு முன்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பதவியேற்க அழைக்க வேண்டும் என்று வாதிட்டனர். தொடர்ந்து அவைக்கு முன்பாக வந்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு கட்சி உறுப்பினர்களுக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க மார்ஷல்களை அழைக்க வேண்டியது இருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், மேயர் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெரும் விதமாக துணை நிலை ஆளுநர் செயல்படுகிறார் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அரவிந்த கேஜ்ரிவால் நேற்று ட்விட்டரில் பகிர்ந்த கடிதத்தில், டெல்லி துணைநில ஆளுநர் வேண்டுமென்றே பாஜகவுடன் இணைந்தவர்கள் 10 பேரை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் தனது ட்விட்டரில், “அவையின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக, தலைமையேற்கும் அதிகாரியாக நியமிக்கப்படுவது மரபு, ஆனால் பாஜக அனைத்து ஜனநாயக, அவையின் மாண்புகளை அழித்துவருகிறது” என்றார்.
நியமன உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தப் பின்னர், இன்றைய மேயர் தேர்தலுக்கான தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் சத்ய சர்மாவை நியமித்தார். இந்தப் பொறுப்புக்கு அவையின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயலை பரிந்துரைத்திருந்தது.
பாஜக குற்றச்சாட்டு: பாஜகவைச் சேர்ந்த மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே நடைபெறுகிறது. தார்மிக ரீதியாக அவர்கள் தோற்றுவிட்டது தெரிந்ததால் சாக்குப் போக்குச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், பாஜக டெல்லி மேயர் பதவியை தாங்கள் வெல்வோம் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு அவர்களின் சொந்தக் கட்சியினர் மீதே நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சி அவையில் 205 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவை தவிர, டெல்லியைச் சேர்ந்த பாஜகவின் 7 மக்களவை உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், டெல்லி சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்ட 14 எம்எல்ஏக்கள் மேயர் தேர்தலில் பங்கேற்கின்றனர். டெல்லியுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியும், 104 வார்டுகளில் பாஜகவும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT