Published : 06 Jan 2023 01:58 PM
Last Updated : 06 Jan 2023 01:58 PM

மீண்டும் காங். வசமான விசுவாசிகள்... குலாம் நபி ஆசாத் அதிர்ச்சி - ராகுல் யாத்திரைக்கு முன் திருப்பம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய உத்வேகம் தரும் வகையில் குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளனர். காஷ்மீரில் ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் உள்ளூர் காங்கிரஸுக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர் பீர்சதா முகமது சையத், முசாபர் பாரே, பல்வான் சிங், மொகிந்தர் பரத்வாஜ், பூஷன் டோக்ரா, விநோத் சர்மா, நரீந்தர் ஷர்மா, நரேஷ் சர்மா, அம்ப்ரீஷ் மகோத்ரா, சுபாஷ் பாகத், பத்ரிநாத் சர்மா, வருண் மகோத்ரா, அனுராதா சர்மா, விஜய் டர்கோத்ரா, சந்தர் பிரபா சர்மா உள்ளிட்டோர் குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்களில் தாரா சந்த், பல்வான் சிங் ஆகியோர் குலாம் நபி ஆசாத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக அறியப்பட்டவர்களாவர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “இந்த நாள் காங்கிரஸுக்கு மிகப் பெரிய நாள்” என்று கூறியுள்ளார்.

ராகுலை கடுமையாக விமர்சித்த குலாம் நபி ஆசாத்: காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களில் குலாம் நபி ஆசாத், வெளிப்படையாக ராகுல் காந்தி பல்வேறு விமர்சனங்களை வைத்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த குலாம் நபி ஆசாத் தனது நீண்ட கடிதத்தின் பெரும்பான்மை பகுதியை ராகுல் மீதான விமர்சனத்திற்கு ஒதுக்கியிருந்தார். புதிய கட்சியை தொடங்கிய அவர் அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி என்று பெயர் சூட்டினார். ஏற்கெனவே பாஜகவின் பி டீம் என்ற விமர்சனங்களுக்கு உள்ளான குலாம் நபி ஆசாத்தின் இந்த புதிய கட்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் காஷ்மீரில் பாஜகவுக்கு வலு சேர்க்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தான் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து அவரது விசுவாசிகள் பலரும் விலகி மீண்டும் தாய்க் கழகமான காங்கிரஸ் தங்களை இணைத்துக் கொண்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

மீண்டும் இணைவாரா ஆசாத்? - ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு வர உள்ளதால், அதில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவருமான அம்பிகா சோனி மூலம் குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறும், அப்போது ராகுல் காந்தியிடம் நேரடியாக பேசுமாறும் குலாம் நபி ஆசாத்தை அம்பிகா சோனி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸில் மீண்டும் இணைவது குறித்து முடிவு எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தான் தொடங்கி உள்ள ஜனநாயக சுதந்திர கட்சி வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், காங்கிரஸில் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பது குறித்து இன்னும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆசாத்தின் விசுவாசிகள் பலரும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

ஜனவரி 26ல் காஷ்மீரில் நிறைவடையும் யாத்திரை: கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து அதன் 108-வது நாளில் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. ஜனவரி 5ம் தேதி ஹரியாணாவிற்குள் நுழைந்த யாத்திரை பஞ்சாப் வழியாக பயணித்து வரும் 26 ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x