Published : 06 Jan 2023 05:31 AM
Last Updated : 06 Jan 2023 05:31 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்தவர் பிரியங்கா பாட்டீல் (31). இவரது தந்தை ரமேஷ் கந்தப்பா பாட்டீல் ராணுவத்தில் சுபேதாரராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு இவர் காஷ்மீர் எல்லையில் கண்ணிவெடி அகற்றும் பணியின்போது மரணம் அடைந்தார்.
இந்நிலையில் பிரியங்கா பாட்டீல் கர்நாடக கல்வித் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். அவர் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டையை ராணுவ வீரர்களுக்கான நல வாரியத்திடம் கோரினார். அதற்கு ராணுவ வீரர்களுக்கான நலவாரியம், “பிரியங்கா பாட்டீலுக்கு திருமணம் ஆகிவிட்டதால், ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டை வழங்க முடியாது'' என தெரிவித்தது.
இதையடுத்து பிரியங்கா பாட்டீல் கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “என்னுடைய தந்தை மரணம் அடைந்தபோது எனக்கு 15 வயது. கர்நாடக அரசு பணிக்கு விண்ணப்பித்தபோது, முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க கோரினேன். ஆனால் ராணுவ வீரர்களுக்கான நல வாரியம், எனக்கு திருமணம் ஆகி விட்டதால், முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டையை வழங்க மறுக்கிறது'' என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான சம உரிமை வழங்கப்பட வேண்டும். திருமணத்தைக் காரணம் காட்டி பெண்ணுக்கு உரிமை மறுப்பது என்பது அரசியலமைப்பின் 14-வது சரத்தை மீறுவதாகும்'' என வாதிட்டார். அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா நேற்று தீர்ப்பளித்தார்.
அவர் தனது தீர்ப்பில், “திருமணம் ஆனாலும் மகனைப் போல தந்தைக்கு பெண்ணும் மகள்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. பெண் என்பதற்காக முன்னாள் ராணுவ வீரர் மகள் என்ற அடையாள அட்டை வழங்க முடியாது என கூற இயலாது. அத்தகைய விதிகளை மாற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT