Published : 06 Jan 2023 07:30 AM
Last Updated : 06 Jan 2023 07:30 AM
புதுடெல்லி: சர்வதேச பயணிகளிடம் டிசம்பர் 24 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை 11 நாட்கள் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 124 பேரிடம் ஒமிக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை பிற நாடுகளில் இருந்து இந்தியா வந்த 19,227 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தப் பயணிகள் ஒமிக்ரானின் 11 துணை திரிபுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு சமீபத்தில் மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் கரோனா சிகிச்சைக்கான ஒத்திகை நடைபெற்றது. நாட்டில் கரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 22-ம்தேதி முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. தினசரி புதிய பாதிப்பு பல நாட்களாக 200-க்கும் குறைவாகவே உள்ளது.
188 பேருக்கு கரோனா
இந்நிலையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் 188 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,554 ஆக குறைந்துள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.10 சதவீதமாகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.12 சதவீதமாகவும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT