Published : 06 Jan 2023 05:56 AM
Last Updated : 06 Jan 2023 05:56 AM

பிரதமர் மோடியுடன் சத்ய நாதெல்லா சந்திப்பு: இந்தியாவின் சிறப்பான டிஜிட்டல் கட்டமைப்புக்கு பாராட்டு

சத்ய நாதெல்லா மற்றும் பிரதமர் மோடி

புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான சத்ய நாதெல்லா நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முக்கிய தலைவர்கள், தொழில் முனைவோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களைச் சந்தித்து அவர் உரையாடி வருகிறார்.

இந்தியப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று, அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்தச் சந்திப்புக் குறித்து சத்ய நாதெல்லா தன் ட்விட்டர் பக்கத்தில், “டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவது பெரும் ஊக்கம் தருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் நாங்கள் பங்களிப்பு செய்ய விரும்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “தொழில்நுட்பத்திலும் கண்டுபிடிப்பிலும் இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்திய இளைஞர்கள் இந்த உலகை மாற்றும் வல்லமைகொண்ட ஐடியாக்களைக் கொண்டிருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சத்ய நாதெல்லா சந்தித்துப் பேசினார். டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து அந்த சந்திப்பில் இருவரும் உரையாடினர்.

கடந்த மூன்று நாட்களில் வெவ்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட சத்ய நாதெல்லா இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்புக் குறித்தும், இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் மேற்கொள்ளும் முதலீடுகள் குறித்தும், உலகின் போக்கில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் குளோட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார்:

“இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு சிறப்பானது. தொழில்நுட்பம் சார்ந்து செலவிடுவதில் இந்தியா உலகின் முதல் 10 நாடுகளுள் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவை முக்கியமானகளமாக கருதுகிறது. இந்தியாவில் மைக்ரோசாஃப்டின் மிகப் பெரும் மேம்பாட்டு மையங்கள் உள்ளன. மேலும், மிகப் பெரும் தரவு மையங்களை இந்தியாவில் அமைக்க முதலீடு செய்துள்ளோம்.

தொழில்நுட்பம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்க வழி செய்கிறது. ஒவ்வொருவரின் தனித்திறனை வெளிக் கொண்டுவர உதவுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தற்போது மிக முக்கியமானது. நமது வளர்ச்சிசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புவியின் லயத்தோடு இசைந்து இருக்க வேண்டும்.

2025 வாக்கில் பெரும்பாலான செயலிகள் குளோட் முறையில்தான் செயல்படும். அந்த வகையில் குளோட் தொழில்நுட்பம் உலகின் போக்கில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.” இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்ரோவுடன் ஒப்பந்தம்

விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் நேற்று இஸ்ரோவுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப உருவாக்கத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் களமிறங்கி வருகின்றன. இந்நிலையில், அந்நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்க இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

பிரியாணி காலை உணவா?

கடந்த புதன்கிழமை சத்ய நாதெல்லா பெங்களூருவில் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சேட் ஜிபிடி ரோபோவுடன் உரையாடினார். அந்த ரோபோவிடம், வருங்காலத்தில் தென்னிந்தியாவில் என்னென்ன காலை உணவுகள் பிரபலமாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு அந்த ரோபோ ஒரு பட்டியலுடன் வந்தது. அதில் இட்லி, தோசை, வடை என வழக்கமான காலை உணவுடன் பிரியாணியையும் பட்டியலிட்டது. உடனே, சத்யா நாதெல்லா விளையாட்டாக, “பிரியாணியை காலை உணவு என்று சொல்லி ஹைதராபாத்காரனை அவமதிக்ககூடாது” என்றார். அதற்கு அந்த ரோபோ “ஐ யம் சாரி” என்று மன்னிப்புக் கேட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x