Published : 05 Jan 2023 03:36 PM
Last Updated : 05 Jan 2023 03:36 PM

ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களுக்கு நிம்மதி: உத்தராகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹல்த்வானி மக்கள்

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் ஹல்த்வானி பகுதியில் இருந்து 4,000 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிட்ட அம்மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மக்களை அப்புறப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது பெரிய மாநகரம் ஹல்த்வானி. இங்கு ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்திருப்பதாக நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம் 20-ம் தேதி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமத்திருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், நிலத்தை ரயில்வே வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என கூறப்படும் பகுதியில் 4 ஆயிரம் வீடுகள், 4 அரசு பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, 10 மசூதிகள், 4 கோயில்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, இம்மாதம் 9-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனைவருக்கும் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஊர்வலங்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஹால்ட்வானி பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தராகண்ட் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

''50 ஆயிரம் மக்களை ஒரே இரவில் வெளியேற்ற முடியாது. அந்த நிலத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை என்றாலும், அவர்களை வகைப்படுத்த வேண்டும். ரயில்வேக்கு அந்த நிலம் அவசியம் எனில், பொதுமக்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x