Published : 05 Jan 2023 02:09 PM
Last Updated : 05 Jan 2023 02:09 PM
ஜோஷிமத்: உத்தராகண்ட மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் தொடர்ச்சியாக நிலம் சரிந்ததன் விளைவாக அங்குள்ள சுமார் 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்டின் ஆன்மிக நகரமான ஜோஷிமத்தில் தொடர்ந்து நிலம் சரிந்ததன் காரணமக அங்குள்ள சுமார் 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலநிலை மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் சரிந்ததால் வீடுகளில் ஏற்பட்டுள்ள விரசல்கள் காரணமாக 60 குடும்பங்கள் வீடுகளை காலி செய்து நகரை விட்டு வெளியேறியுள்ளன. 29 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தனர். சுமார் 500 குடும்பங்கள் ஆபத்தான நிலையில், இன்னும் விரிசல் உள்ள வீடுகளிலோ அல்லது குளிரில் வேறு இடங்களிலோ வசித்து வருகின்றனர்.
வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காரணமாக 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தொகையில் 10 சதவீதமாகும். அனைத்து வீடுகளும் நகராட்சியால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று நகராட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐஐடி ரூர்கியைச் சேர்ந்த குழுவினர் நகரில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பாதிப்பு குறித்து அறிக்கை தயாரித்து மாநில முதல்வருக்கு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். தற்போது சாலைகளிலும் விரிசல்கள் விழ ஆரம்பித்துள்ளது. அரசியல், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இமையமலையில் உள்ள இந்த நகரத்தில் உள்ள 9 ப்ளாக்குகளும் விரிசலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு 3-வது ப்ளாக்கில் இருந்து தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "நான் விரைவில் ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று சூழலை கையாளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். அதுகுறித்த அனைத்து அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நான் ஜோஷிமத் நகராட்சித் தலைவர் சைலேந்திர பவாருடன் சூழல் குறித்து கேட்டறிந்துள்ளேன்" என்றார்.
"உடனடியான எங்களை மாற்று இடங்களில் குடியேற்றுங்கள் என்று நாங்கள் கடந்த ஒரு வருடமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், யாரும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது ஜோஷிமத்தில் விரிசல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் தங்களின் வீடுகளுக்கு மூங்கில் கம்புகளால் அண்டை கொடுத்து கந்தல் துணிகளை வைத்து மூடியுள்ளார்கள். மாநில அரசு எதுவும் செய்யவில்லை" என்று சேவ் ஜோஷிமத் இயங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அதுல் சதி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் நகராட்சித் தலைவரான மாதவி சதி கூறுகையில், "இந்த விரிசல் ஏற்பட்டுள்ள வீட்டில் வசிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி ஏதும் இல்லை. சாமோலியின் மாவட்ட நீதிபதி இந்த இடத்தை வந்து ஆய்வு செய்தார் ஆனாலும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை" என்று தெரிவித்தார்
இதற்கிடையில், நிலநடுக்கம் உருவாகும் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை அளித்துள்ளது. சாமோலியின் மாவட்ட நீதிபதி, இணை நீதிபதி தீபக் சைனி என்பவரை ஜோதிர்மத்தின் நிலவரத்தை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி நியமித்துள்ளார்.
ஜோஷ்மத் நகரின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அங்கிருந்து 300 கி.மீ. தள்ளியிருக்கும் மாநில தலைநகருக்குச் சென்றுள்ளது. அங்கு முதல்வரைச் சந்தித்து இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு இடத்திற்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை வைக்கவுள்ளது.
இமயமலையில் மேற்கொள்ளப்படும் புனித பத்ரிநாத் யாத்திரை, மலையேற்றம், பூக்களின் பள்ளத்தாக்கு போனற பல இடங்களுக்கு ஏறிச் செல்வதற்கான நுழைவு வாயிலாக இந்த நகரம் கருதப்படுகிறது. இங்குள்ள ஜோதிர்மத் இந்து மதத்தின் தாயகமாக கருதப்படும் முக்கியமான மத நிறுவனங்களில் ஒன்றாகும். அதேபோல், சீனா எல்லைக்கு அருகில் இருக்கும் ராணுவ மையத்தின் கண்டோமெண்ட் ஒன்று இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT