Published : 05 Jan 2023 04:57 AM
Last Updated : 05 Jan 2023 04:57 AM
புதுடெல்லி: சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்யும் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தில்,ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது: தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப கட்டமாக ரூ.19,744 கோடி மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்படும். இதில் பசுமை ஹைட்ரஜன் மாற்றம் செயல்பாடுகளுக்கு ரூ.17.490 கோடியும், முன்னணி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும், இதர திட்ட செயல்பாடுகளுக்கு ரூ.388 கோடியும் ஒதுக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற் கான வழிகாட்டுதல்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உருவாக்கும்.
இத்திட்டம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஆண்டுக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன்களாக மேம்படுத்தும். இதோடு நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனும் 2030-ம் ஆண்டுக்குள் 125 ஜிகா வாட்டாக அதிகரிக்கும். இது ரூ.8 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழிவகுப்பதோடு, 2030-ம் ஆண்டுக்குள் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளையும் உருவாக்கும்.
நாட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மூலம், ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான படிம எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களையும் ஆண்டுக்கு 50 மில்லியன் டன்கள் அளவுக்கு குறைக்கும்.
பசுமை ஹைட்ரஜனின் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும். தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் எரிசக்தி துறைகளின் கார்பன் உமிழ்வுகளை குறைக்கும். பெட்ரோல், டீசல் இறக்குமதியை சார்ந்திருப்பதையும் குறைக்கும்.
பசுமை ஹைட்ரஜன் உற்பத் தியை உள்நாட்டில் மேம்படுத்துவது வேலைவாய்ப்புகளை உருவாக்கும், நவீன தொழில்நுட்பங்களை யும் மேம்படுத்தும். இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் துறைபங்களிப்பில் ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும். இத்திட்டம் வெற்றியடைவதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுதுறைகள் ஒருங்கிணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT