Published : 04 Jan 2023 04:21 PM
Last Updated : 04 Jan 2023 04:21 PM
புதுடெல்லி: பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பெலா எம் திரிவேதி தன்னை விடுவித்துக் கொண்டு விலகியுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் அவரது கண்முன்பாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்று வந்த 11 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி, பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளின் விசாரணைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக நீதிபதி பெலா எம் திரிவேதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை நீதிபதி பெலா எம் திரிவேதி அங்கம் வகிக்காத அமர்வில் பட்டியலிடும்படி, நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி, பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
நீதிபதி அஜய் ரஸ்டோகி,"எனது சகோதரி இந்த வழக்குகள் விசாரணையில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதால், இந்த வழக்குகளை ஒன்றாக இணைக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியாது. தற்போது பாதிக்கப்பட்டவர் இங்கே இருக்கிறார். நாங்கள் பாதிக்கப்பட்டவரின் விஷயத்தை முதன்மையானதாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வழக்குகளை நீதிபதி திரிவேதிரி இல்லாத அமர்வில் பட்டியலிட வேண்டும். அப்படி வேறு அமர்வில் பட்டியலிடப்படும் போது, வழக்குகள் ஒன்றாக இணைக்கப்படும்" என்றார்.
முன்னதாக, 11 பேரை முன்கூட்டிய விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்த மனு கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும் அந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி பெலா எம் திரிவேதி தன்னை விடுவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT